ரவை ஸ்னாக்ஸ் (Semolina Snacks)

        ரவையை வைத்து செய்யக் கூடிய ஸ்னாக்ஸ் தேநீருடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒரு மாதத்திற்கு வைத்திருந்தாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இப்போது செய்முறை முறையைக் காண்போம்.


《 தேவையான பொருட்கள் 》

கோதுமை மாவு : 1 கப்
ரவை : 1/2 கப்
மிளகாய்த் தூள் : 1/2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப
கடுகு : 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் : 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் : 2
வேர்க்கடலை : 1/4 கப்
பாசிப் பருப்பு : 1/3 கப்
கடலை பருப்பு : 1/4 கப்
முந்திரி : 8 (அ) 10
மாங்காய் பொடி : 1 தேக்கரண்டி

《 செய்முறை 》

       ¤ ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, மிளகாய்த் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

       ¤ பின்னர் இந்த மாவில் 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

       ¤ எண்ணெய்யானது மாவில் இந்த அளவிற்கு இருந்தால் தான் மாவினை உள்ளங்கையில் அழுத்தி பிடிக்கும் போது உடைந்து விழாமல் அப்படியே ஒட்டிக் கொள்ளும்.

       ¤ எண்ணெய் ஊற்றி மாவினை பிசைந்த பின் சிறிதளவு மாவினை கையில் எடுத்து அழுத்துங்கள் உடைந்து விழுந்தால் மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

       ¤ பின் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மிருதுவாக (சப்பாத்திக்கு பிசைவது போல்) பிசைந்து 10 நிமிடத்திற்கு தட்டு போட்டு மூடி விடவும்.

       ¤ இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய், வேர்க்கடலை,பாசிப் பருப்பு,கடலை பருப்பு,முந்திரி,உப்பு தேவையான அளவு மற்றும் மாங்காய் பொடி  ஆகியவற்றை சேர்த்து மீடியம் அனலில் வறுத்துக் கொள்ளவும்.

       ¤ இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு பிறகு இதில் இருந்து மணம் வீசும். இந்த ஸ்னாக் இப்போது சமைப்பதற்கு தயாராகி விட்டது.

       ¤ வறுத்தவை ஆறும் வரை காத்திருந்து அதனை மிக்ஸி ஜாரில் இட்டு பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும்.இந்த பவுடரை ரவை ஸ்னாக்கின் உள்ளே வைத்து பொரிக்க வேண்டும்.

       ¤ இப்போது பிசைந்து வைத்த மாவினை எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து விட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக எடுத்து உருட்டிக் கொள்ளவும்.

       ¤ பின் சப்பாத்திக் கட்டையில் எண்ணெய் தடவி உருட்டிய துண்டுகளை சப்பாத்தி திரட்டுவது போல் வட்டமாக திரட்டிக் கொள்ளவும்.


       ¤ அதன்பின் அதனுள் அரைத்த பவுடரை ஒரு தேக்கரண்டி வைத்து நான்கு புறமும் மடித்து வைக்கவும். இதேபோல் அனைத்தையும் மடித்து எடுத்துக் கொள்ளவும்.


       ¤ இப்போது வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மடித்த ஸ்னாக்கை ஒவ்வொன்றாக அதில் போட்டு இருபுறமும் பொன்நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

       ¤ சுவையான மொறுமொறுப்பான ரவை ஸ்னாக்ஸ் தயார்.

《 குறிப்பு 》

        ரவை எப்போதும் அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்சாது அதனால் சீரணக் கோளாறு ஏற்படாது.

Comments