முட்டையில்லாத பேன்கேக் (Soft Fluffy Eggless Pancake)

        மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் சுலபமாக மற்றும் மிருதுவான முட்டையில்லாத பேன்கேக் உணவு முறையின் செய்முறையைக் காண்போம்.குறைந்த நேரத்தில் செய்வதால் காலை நேர உணவிற்கு மிகவும் பொருத்தமானதும் கூட.


《 தேவையான பொருட்கள் 》

மைதா மாவு : 2 கப்
சர்க்கரை தூள் : 2 தேக்கரண்டி
உப்பு : 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் : 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி
பால் : 1 கப்
நெய் : 2 தேக்கரண்டி

《 செய்முறை 》

       ♤ ஒரு பௌலில் இரண்டு கப் மைதா மாவு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

       ♤ பின்னர் இந்த மாவில் உருக்கிய இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து விட்டு பின் அதனுடன் ஒரு கப் பால் சேர்த்து கட்டிப்படாத படி கலக்கி விடவும்.

       ♤ மாவானது மிகவும் கட்டியாகவும் இருக்கக்கூடாது,அல்லது தண்ணீர் பதத்துடனும் இருக்கக் கூடாது..மாவின் கலவையை சரியான அளவில் பால் விட்டு கலக்கி எடுத்துக் கொள்ளவும்.

       ♤ இப்போது அடுப்பை பற்ற வைத்து தவாவில் சிறிதளவு நெய் ஊற்றி தவா முழுவதும் படர விடவும்.அனலானது குறைந்த அளவில் வைத்திருக்கவும்.

       ♤ தவா சூடேறியதும் ஒரு டிஷ்யூ(Tissue) பேப்பரினால் நெய் முழுவதையும் துடைத்து எடுத்து விடவும்.

       ♤ பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தவா முழுவதும் ஆறும் வரை காத்திருக்கவும்.

       ♤ மறுபடியும் தவாவை குறைந்த அனலில் வைத்து மீண்டும் ஒருமுறை டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைக்கவும்.


       ♤ இதன்பின் பேன்கேக் கலவையை தவாவில் ஊற்றவும்.நாம் இங்கு ஸ்டீல் தவா உபயோகிப்பதால் பேன்கேக் ஒட்டாமல் இருக்கும்.

       ♤ ஒரு நிமிடம் கழித்து இதனை திருப்பி விடவும்.இதேபோல் ஒவ்வொரு பேன்கேக் செய்யும் முன் டிஷ்யூ பேப்பர் கொண்டு தவாவை துடைத்து விட்டு பேன்கேக் கலவையை ஊற்றவும்.

       ♤ இருபுறமும் பேன்கேக் பொன் நிறமானதும் அதனை ஒரு தட்டில் மாற்றி பட்டர் மற்றும் தேனுடன் பரிமாறவும்.

《குறிப்பு》

நான் ஸ்டிக் தவா உபயோகிப்பதற்கு பதில் ஸ்டீல் தவா உபயோகித்து சமைப்பது உடல் நலத்திற்கு எந்த ஒரு கெடுதலையும் ஏற்படுத்தாது.

Comments