ரோட்டுக் கடை சால்னா (Hotel Style Salna)

       ஓட்டல் ஸ்டைல் பரோட்டா சால்னா செய்யும் முறையைக் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

தேங்காய் - 1/3 கப்
முந்திரி -10
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
பிரிஞ்சி இலை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 
தக்காளி - 2 (medium size)
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 1/2 தேக்கரண்டி
புதினா இலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

அரைப்பதற்கு :-

தேங்காய் - 1/3 மூடி
முந்திரி - 10 (அ) கசகசா - 1 தேக்கரண்டி

செய்முறை :-

          √ முதலில் தேங்காய் விழுது அரைத்துக் கொள்ளலாம். 

          √ அதற்கு எடுத்துக் கொண்ட 1/3 மூடி தேங்காவை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

          √ அதனுடன் 10 முந்திரியை சேர்த்து மைய அரைத்துக் கொண்டு பின் ஒரு கப் அளவிலான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

          √ பாத்திரத்தில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,சோம்பு சேர்க்கவும்.

          √ பின்னர் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

          √ வெங்காயம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

          √ அதன்பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 

          √ பின் சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கி விடவும்.

          √ பின்னர் 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள், 2 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி சிக்கன் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

          √ மசாலா வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். 

          √ இப்போது எடுத்து வைத்த 1 1/2 தேக்கரண்டி கடலை மாவை தண்ணீர் விட்டு கட்டிப்படாமல் கரைத்துக் கொள்ளவும்.

          √ அடுப்பில் தண்ணீர் கொதித்ததும் அதனுடன் கரைத்த கடலை மாவினை ஊற்றி சால்னாவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

(கடலை மாவு சால்னாவை கெட்டியாக்கும் அதனால் கொஞ்சம் அதிகமாகவே நீர் சேர்த்துக் கொள்ளலாம்)

          √ மசாலா நன்கு கொதி வந்ததும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். பின்னர் சால்னாவுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

          √ இதன்பின் தேவையான அளவு உப்பு சேர்த்து சால்னாவை மூடி போட்டு ஒருபக்கமாக மூடவும்(முழுவதும் மூடாமல்).

          √ சால்னாவானது பொங்கி வரும்.இப்போது அடுப்பை குறைந்த அளவு வைத்து விட்டு 20 முதல் 30 நிமிடம் கொதிக்க விடவும். (சால்னா எவ்வளவு கொதிக்கிறதோ அவ்வளவு சுவையாக இருக்கும்.)

          √ இப்போது சுவையான ஓட்டல் முறை பரோட்டா சால்னா தயார்.

Comments